மைசூருவில், விவசாய சங்கம் சார்பில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்
மைசூருவில், விவசாய சங்கம் சார்பில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 11-ந் தேதி முதல்-மந்திரி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.;
மைசூரு:
அக்னிபத் திட்டம்
ராணுவத்தில் ஆட்களை தேர்வு செய்வதற்காக அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டும் பணி என்ற முறையில் எடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் அக்னிபத் திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் படகலாபுரா நாகேந்திரா தெரிவித்துள்ளார்.
முதல்-மந்திரி இல்லம் முற்றுகை
இதுதொடர்பாக அவர் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அக்னிபத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நாளை (நாளை) பெங்களுரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். மேலும் அடுத்த மாதம் (ஜூலை 2-ந் தேதி) விவசாய சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் ஜூலை 11-ந் தேதி அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.