1,300 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடிவு-முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க 1,300 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சித்த ராமையா கூறினார்.

Update: 2023-10-13 21:21 GMT

பெங்களூரு:-

மின்சாரம் கொள்முதல்

கர்நாடக மின்துறை அதிகாரிகள் கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஆண்டுடன் (2022) ஒப்பிடும்போது இந்த ஆண்டு மின் தேவை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது தினசரி மின்

பயன்பாடு 180 யூனிட்டில் இருந்து 260 யூனிட்டாக உயர்ந்துள்ளது. மழை பற்றாக்குறையால் நீர்மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தட்டுப்பாட்டை போக்க குறுகிய கால அடிப்படையில் 1,300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சூரியசக்தி பூங்கா

நிலக்கரி கிடைக்கும் பகுதியில் மழை பெய்ததால் நமக்கு தரமான நிலக்கரி கிடைக்கவில்லை. இதனால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மாதம் 15 லட்சம் டன் நிலக்கரி பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மேற்கொண்ட தீவிரமான முயற்சியால் கடந்த மாதம்(செப்டம்பர்) கூடுதலாக 2 லட்சம் டன் நிலக்கரி வாங்கப்பட்டது.

உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. தற்போது பெறப்படும் இந்த மின்சாரம் வருகிற மழை காலத்தில் அந்த மாநிலங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இதற்கு டெண்டர் விடப்படுகிறது. பாவகடாவில் கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூரியசக்தி மின் தகடுகள் அமைக்கப்படும். கலபுரகியில் 500 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் சூரியசக்தி மின் உற்பத்தி பூங்கா நிறுவப்படும்.

மின்வெட்டு

விவசாய பம்புசெட்டுகளுக்கு தினமும் குறைந்தது 5 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மின்வெட்டு அமல்படுத்தக்கூடாது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் மின் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்