புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூரு பொம்மனஹள்ளி ஹொங்கசந்திராவில் பேகூர் மெயின் ரோட்டில் சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் சாலை பணிகளை முழுமையாக முடிக்காமல் கற்களும், மணலும் மட்டும் போட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகளும், அந்தப்பகுதி மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- நரேஷ், ஹொங்கசந்திரா, பெங்களூரு.
நடைபாதையில் கிடக்கும் மரத்தடி அகற்றப்படுமா?
பெங்களூரு எச்.ஏ.எல். அருகே விபூதிபுரா பகுதியில் உள்ள நடைபாதையில் ஒரு பெரிய மரத்தடி நீண்ட நாட்களாக கிடக்கிறது. மேலும் சரக்கு ஆட்டோவும் நிற்கிறது. அந்த மரத்தடியையும், சரக்கு ஆட்டோவையும் அகற்ற அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் அந்த நடைபாதையை பயன்படுத்தும் வகையில் மரத்தடியை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சுமிதா, எச்.ஏ.எல்., பெங்களூரு.
புதிய தார்சாலை பெயர்ந்த அவலம்
பெங்களூரு பாகலகுண்டே புவனேஸ்வரி நகர் 5-வது கிராஸ் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அப்பகுதியில் தார்சாலை போடப்பட்டு இருந்தது. ஆனால் 10 நாட்களில் அந்த சாலையில் தார் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. தற்போது மீண்டும் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. சாலை அமைப்பதில் அலட்சியமாக செயல்பட்ட காண்டிராக்டர் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமான சாலை அமைக்க வேண்டும்.
- தீபா, பாகலகுண்டே, பெங்களூரு.