கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எனது வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டதா?; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் மறுப்பு
குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தனது வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டை போலீஸ் மந்திரி பரமேஸ்வர் மறுத்துள்ளார்.;
பெங்களூரு:
போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குமாரசாமி தனது தலைமையில் இருந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பரமேஸ்வரின் வீட்டில் எம்.எல்.ஏ.க் கள் கூடி ஆலோசித்தனர் என்று கூறியுள்ளார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எனது வீட்டில் அத்தகைய எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை. எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளின் வீட்டுக்கு வருவது சகஜமானது. ஆனால் எனது வீட்டில் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
குமாரசாமி சொல்வதற்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. அவருக்கு கர்நாடக மக்கள் ஏற்கனவே தக்க பதில் கொடுத்துள்ளனர். வன விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்துவது தொடர்பாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டம் அனைவருக்கும் ஒன்றே. இதில் சாதி-மதங்களுக்கு இடமில்லை. விலங்குகளின் உடல் பாகங்களை அரசிடம் ஒப்படைக்க காலஅவகாசம் வழங்குவதாக மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறியுள்ளார்.
அதனால் யார் தங்களின் வீடுகளில் அதன் உடல் பாகங்களை வைத்திருந்தாலும், அதை அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிட்காயின் முறைகேடு குறித்து விசாரிக்கும் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அந்த அதிகாரிகள் குற்றச்சாட்டக்கு ஆளானவரின் போனை ஒட்டுக்கேட்பதாக எழுந்த புகாரை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.
மந்திரி சதீஸ் ஜார்கிகோளி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சுற்றுலா செல்வதாக சொல்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த செலவில் தானே செல்கிறார்கள். சுற்றுலா போகட்டும். அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ராமநகரின் பெயரை மாற்றுவதாக சொல்கிறார்கள். இதில் துமகூருவை சேர்க்க வேண்டாம். நாங்கள் அமைதியாக உள்ளோம்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.