தீவிபத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் நடந்த தீ விபத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர். முறையான அனுமதி பெறாமல் ‘ஹுக்கா’ பார் நடத்தியதும் அம்பலமாகி உள்ளது.

Update: 2023-10-19 21:33 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் நடந்த தீ விபத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர். முறையான அனுமதி பெறாமல் 'ஹுக்கா' பார் நடத்தியதும் அம்பலமாகி உள்ளது.

4-வது தளத்தில் தீவிபத்து

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள வணிகவளாகம் எதிரே 4 மாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் 2-வது, 3-வது, 4-வது மாடிகளில் 'ஹுக்கா' பார், ரெஸ்டாரண்ட் மற்றும் கேளிக்கை விடுதி (பப்) செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் 4-வது மாடியில் தீப்பிடித்தது. அந்த தீ, 4-வது தளம் முழுவதுமாக பரவி எரிந்தது. அத்துடன் அங்கிருந்த 15 சிலிண்டர்களில் 4 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறி இருந்தது.

இதன் காரணமாக 4-வது மாடியில் இருந்து தப்பிக்க முடியாமல் பரிதவித்த நேபாளத்தை சேர்ந்த தொழிலாளி பிரேம் சிங், 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர் கீழே குதிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தீவிபத்து நடந்த கட்டிடத்தை பார்வையிட்டு தீயணைப்பு துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் விசாரணை நடத்தி இருந்தார்.

உரிமையாளர் தலைமறைவு

இந்த நிலையில், கேளிக்கை விடுதி நடத்தி வந்த கரண் ஜெயின் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் 'ஹுக்கா' பார் நடத்துவதற்கு எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் எதுவும் அங்கு இல்லை என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் கரண் ஜெயின் மீதும், 4-வது மாடி கட்டிடத்தின் உரிமையாளரான குடால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது வழக்குப்பதிவாகி இருப்பதை அறிந்ததும் கரண் ஜெயின் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

இதற்கிடையில், நேற்று முன்தினம் தீவிபத்து நடந்த போது பிரேம் சிங்குடன், மேலும் 3 தொழிலாளர்கள் தப்பி ஓடி வந்துள்ளனர். ஆனால் 4-வது மாடியில் இருந்த சமையல் அறையில் பிரேம் சிங் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டுள்ளார். அந்த நேரத்தில் தீ வேகமாக பரவியதுடன், சிலிண்டர்களும் வெடித்து சிதறியுள்ளது. இதனால் வேறு வழியின்றி 4-வது மாடியில் இருந்து குதித்தது தெரியவந்துள்ளது.

மாடியில் இருந்து குதித்ததால் பிரேம்சிங் கால்கள் முறிந்துள்ளன. இதற்காக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்