கனகபுரா விவகாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறினார்.
பெங்களூரு:-
கர்நாடக முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தொந்தரவு இல்லை
கனகபுராவை பெங்களூருவில் சேர்ப்பதாக துணை முதல்-மந்திரி கூறியதை கவனித்தேன். ராமநகர் மாவட்டம் நிர்வாக ரீதியாக தற்போது சரியாக உள்ளது. நாங்கள் அனைவரும் பெங்களூருகாரர்களே. ஒரு காலத்தில் பெங்களூரு வளர்ந்து இருக்கவில்லை. பெங்களூரு வளர தொடங்கியதை அடுத்து ராமநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அரசியலில் பெரிய பதவிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவ்வாறான ஆசை இருப்பது தவறு அல்ல.
கனகபுரா ராமநகரிலேயே இருந்தால் யாருக்கும் தொந்தரவு இல்லை. டி.கே.சிவக்குமாருக்கு என்ன தொந்தரவு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. கனகபுரா ராமநகரிலேயே இருக்க வேண்டும். டி.கே.சிவக்குமார் கட்டுமான தொழிலை மனதில் வைத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவருக்கு நிலத்தின் மீது இருக்கும் தாகம் இன்னும் குறையவில்லை.
எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
இந்த ஆட்சியில் எதுவும் சரியில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே சொல்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூலமே இந்த அரசுக்கு தொந்தரவு ஏற்படலாம். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒக்கலிகர்கள் பெங்களூருவில் சேர வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் நினைக்கலாம்.
இவ்வாறு சி.பி.யோகேஷ்வர் கூறினார்.