காங்.-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்

ஹாசன் அருகே மதுக்கடை திறக்க அனுமதித்தது குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் நடந்தது. பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மந்திரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-16 21:30 GMT

ஹாசன்:

ஹாசன் அருகே மதுக்கடை திறக்க அனுமதித்தது குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் நடந்தது. பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மந்திரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கர்நாடக அரசு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட பொறுப்பு மந்திரிகள் முன்னிலையில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திங்கட்கிழமையான நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதுபோல் ஹாசனில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு, ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரியும், கூட்டுறவுத் துறை மந்திரியுமான கே.என்.ராஜண்ணா முன்னிலை வகித்தார்.

இதில் அரிசிகெரே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவலிங்கேகவுடா, பேளூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எச்.கே.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் எச்.கே.சுரேஷ் பேசுகையில், கரகுண்டா கிராமத்தில் பெண்களின் தாலியை அறுக்க மதுக்கடை திறக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காங்கிரஸ் அரசு காரணம் எனவும் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்

இதற்கு சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ. ஆட்சேபனை தெரிவித்து பேசினார். இதற்கு பா.ஜனதாவினர் கோஷம் எழுப்பினர். இதனால் அதிருப்தியை வெளிப்படுத்திய சிவலிங்கேகவுடா, கூட்டத்தை கெடுக்க ஆட்களை அழைத்து வந்துள்ளீர்களா என கேள்வி கேட்டார்.

அதற்கு எச்.கே.சுரேஷ், ஜவகல் கிராமம் எனது தொகுதிக்கும் வரும். அதனால் கரகுண்டா மதுக்கடை விவகாரம் பற்றி பேச எனக்கும் உரிமை உண்டு என்றார். அத்துடன் அந்த மதுக்கடையை திறந்தவர், உங்கள் நண்பர் தானே என மைக்கில் எச்.கே.சுரேஷ், சிவலிங்கேகவுடாவிடம் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. எச்.கே.சுரேசுக்கு ஆதரவாக பா.ஜனதாவினர் கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது.

பரபரப்பு

இதற்கு மத்தியில் சிவலிங்கேகவுடா பேசுகையில், ஓவராக விளையாடாதீர்கள். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகிறது. இதுவரை மதுக்கடை திறக்க யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. கடந்த பா.ஜனதா ஆட்சியில் வழங்கிய உரிமத்தின் அடிப்படையில் தான் கரகுண்டா பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது என்றார். அவருக்கு ஆதரவாக காங்கிரசார் கோஷமிட்டனர்.

அதன் பிறகு அதிகாரிகள், போலீசார் தலையில் இருகட்சியினரையும் சமாதானப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அமைதியான முறையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மந்திரி முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பா.ஜனதா எம்.எல்.ஏ. இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்