வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவக்கொலை: பெற்றோர் கைது

பிரியப்பட்டணாவில் வேறு சாதி வாலிபரை காதலித்த பி.யூ. கல்லூரி மாணவியை அவரது பெற்றோர் படுகொலை செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.;

Update:2022-06-08 20:53 IST

மைசூரு:

பி.யூ. கல்லூரி மாணவி

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா டவுன் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மனைவி பேபி. இவர்களது மகள் ஷாலினி(வயது 17). இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் பி.யூ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஷாலினிக்கும், பிரியப்பட்டணா புறநகர் பகுதியில் உள்ள மெல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் மஞ்சு வேறு சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி ஷாலினியின் பெற்றோர் அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஷாலினி அதை கேட்கவில்லை. தொடர்ந்து அவர் தனது காதலை வளர்த்து வந்தார்.

வீட்டைவிட்டு வெளியேறினார்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுவும், ஷாலினியும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினி தனது வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அவர் மஞ்சுவை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

ஷாலினியின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஷாலினி மற்றும் மஞ்சுவை அழைத்து பேசினர். அப்போது போலீசார் 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்வது தவறு என்று ஷாலினிக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து ஷாலினி தனது பெற்றோருடன் செல்ல மறுத்தார். இதையடுத்து போலீசார் அவரை அப்பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

படுகொலை

இந்த நிலையில் அந்தகாப்பகத்துக்கு சென்று ஷாலினியை சந்தித்த அவரது பெற்றோர், அவரிடம் நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்தனர். கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்து வந்த ஷாலினியை நேற்று முன்தினம் இரவு சுரேசும், பேபியும் சேர்ந்து சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து படுகொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வீசினர். நேற்று காலையில் ஷாலினி பிணமாக கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி பிரியப்பட்டணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பெற்றோர் கைது

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஷாலினியின் பெற்றோரை கைது செய்தனர்.

அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்பையும் மீறி காதலனுடன் சென்று தங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியதால் ஆத்திரத்தில் ஷாலினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஆணவக்கொலை சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்