சி.பி.ஐ. விசாரணை குறித்து வருமானவரி அதிகாரிகள் முடிவு செய்வார்கள்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி

பெங்களூருவில் பணம் சிக்கிய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை குறித்து வருமான வரி அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Update: 2023-10-18 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வா் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

புகழுக்கு களங்கம்

பெங்களூருவில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கிடைத்த பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரித்துறையினர் அறிவிப்பார்கள். தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் அதுபற்றி அவர்கள் விவரங்களை வெளியிடவில்லை என்று நான் நினைக்கிறேன். பணம் யாருடையது என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவராத நிலையில் அந்த பணம் அவருக்கு சேர்ந்தது, இவருக்கு சேர்ந்தது என்று கூறி புகழுக்கு களங்கம் விளைவிப்பது சரியல்ல.

5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் திரட்டிய பணம் என்று சொல்வது சரியல்ல. இந்த விவகாரத்தில் பா.ஜனதாவினர் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். பா.ஜனதா ஆட்சி காலத்திலும் இத்தகைய சோதனை நடத்தப்பட்டதும், இதில் பணம் சிக்கிய உதாரணங்களும் இங்கு இருக்கின்றன. சோதனையில் சிக்கிய பணம் குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை குறித்து அவர்களே முடிவு செய்வார்கள்.

வெளிநாடு சுற்றுலா

ஜெகதீஷ் ஷெட்டரை ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. சந்தித்து பேசியது பற்றி எனக்கு தெரியாது. நான் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இப்போது தான் பெங்களூரு வந்துள்ளேன். எம்.எல்.ஏ.க்கள் வெளிநாடு சுற்றுலா செல்வது இயல்பானது. அதன் அடிப்படையில் தான் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கலாம்.

இவ்வாறு மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்