காண்டிராக்டர்களின் வீடுகளில் சிக்கிய பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை-மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
காண்டிராக்டர்கள் வீடுகளில் சிக்கிய பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார்.
பெங்களூரு:-
நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கமிஷன் அரசு
கர்நாடகத்தில் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. ஒரு காண்டிராக்டர் வீட்டில் ரூ.42 கோடியும், இன்னொரு காண்டிராக்டர் வீட்டில் ரூ.45 கோடியும் கிடைத்துள்ளது. இது காங்கிரசின் ஊழல் பணம் என்று சொல்கிறார்கள். ஊழலுக்கு இன்னொரு பெயரே காங்கிரஸ் தான். அடுத்து வரும் நாட்களில் இன்னும் எத்தனை சோதனைகள் நடைபெறுகிறதோ தெரியவில்லை.
இது கமிஷன் பணம் என்று சொல்கிறார்கள். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடைபெற வேண்டும். சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை நடைபெற வேண்டும். காங்கிரசின் கருப்பு முகம் வெளியே வந்துள்ளது. சத்திய அரிச்சந்திரரை போல் காங்கிரசார் பேசினார்கள். இது காங்கிரஸ் அரசு அல்ல, காங்கிரஸ் கமிஷன் அரசு. இந்த அரசுக்கு மக்களின் நலன் அக்கறை இல்லை. இந்த அரசு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
மின் உற்பத்தி
பணம் சிக்கிய விவகாரத்தில் காங்கிரசாருக்கு தொடர்பு உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருளை கொண்டு வந்துள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. சூரியசக்தி மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வகைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கா்நாடகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக நிலக்கரியை வழங்குகிறது.
ஒரே வாரத்தில் 56 ஆயிரம் டன் நிலக்கரியை வழங்கியுள்ளோம். கர்நாடக அரசு மத்திய அரசின் கனிம வளத்துறைக்கு ரூ.683 கோடி வழங்க வேண்டும். எந்த திட்டமும் இல்லாமல், அனைவருக்கும் மின்சாரம் இலவசம் என்று காங்கிரஸ் கூறியது. தற்போது மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை இருளில் மூழ்கடித்துள்ளனர்.
கைது செய்ய வேண்டும்
இந்துக்கள் மத்தியில் ஒரு பயமான சூழ்நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் அரசு இந்து விரோத அரசு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசிய பகவானை தைரியம் இருந்தால் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.