பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணம் -தனியார் ஆஸ்பத்திரி மீது வழக்குப்பதிவு
பட்டாசு வெடி விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க பணம் கேட்ட விவகாரம் தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி, டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரு:-
டாக்டர் மீது குற்றச்சாட்டு
பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் கடந்த 7-ந் தேதி பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெங்களூரு மடிவாளா அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற ஆணழகன் வெங்கடேஷ் என்பவரும் ஒருவர் ஆவார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி இருந்தார்.
இந்த நிலையில், வெங்கடேசுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரி டாக்டர் சாகர் மற்றும் சில ஊழியர்கள், வெங்கடேசின் குடும்பத்தினரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுக்க தாமதம் ஆனதால் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், டாக்டரின் அலட்சியமே வெங்கடேஷ் சாவுக்கு காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
ஆஸ்பத்திரி மீது வழக்கு
முன்னதாக முதல்-மந்திரி சித்தராமையா, வெடிவிபத்தில் காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் முதல்-மந்திரியின் உத்தரவையும் மீறி வெங்கடேசுக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரி பணம் கேட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம், டாக்டர் சாகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கோரி கோரமங்ளா போலீஸ் நிலையத்தில் பெங்களூரு மாவட்ட கலெக்டர் தயானந்த் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.