பங்காருபேட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

கோலாரில் தொடர் மின்தடை ஏற்படுவதை கண்டித்து ராபர்ட்சன்பேட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-10-11 18:45 GMT

பங்காரு பேட்டை

தொடர் மின்தடை

கோலார் தங்கவயலில் தினமும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், மாணவர்கள், மருத்துவமனை நிர்வாகம், ஏ.டி.எம். சேவை ஆகியவை முடங்கி போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் படிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதேபோல கோலார் மாவட்டத்தில் ஏற்படும் மின்தடையால் விவசாயிகள், விளை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கடும் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே இந்த மின் தடையை சரி செய்து சீரான மின்வினியோகம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் பெஸ்காம் நிர்வாக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தினமும் ஒரு  காரணத்தை கூறி, மின்  வினியோகத்தை சீரமைப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று கோலார் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பசுமை புரட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் பங்காருபேட்டை தாலுகா அலுவலம் முன்பு தொடர் மின்தடை ஏற்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு கோலார் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாஸ் தலைமை தாங்கினார்.

அப்போது பெஸ்காம் நிர்வாக அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர். மேலும் சீரான மின்வினியோகம் வழங்கவேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் சீனிவாஸ் பேசியதாவது:-

கோலார் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு சீனிவாசப்பூர், முல்பாகல், மாலூர், பங்காருபேட்டை, கோலார் தங்கவயல் ஆகிய தாலுகாக்களில் காலை 6 மணி முதல் இரவு வரை மின் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களும் திக்குமுக்காடி வருகின்றனர்.

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு, 12 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. மேலும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பின்னர் இந்த இலவச மின்சாரத் திட்டத்தை ஏன் மாநில அரசு அறிவிக்கவேண்டும்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோலார் மாவட்டத்திற்கு மட்டும் இந்த இலவச மின்சார திட்டம் கிடையாது என்று கூறிவிட்டு போகலாம். ஏனென்றால் மினசாரம் இருப்பது இல்லை , பின்பு ஏன் இந்த திட்டம்.

இதேநிலை நீடித்தால் கோலார் மாவட்டத்தில் தொழிற்சாலை, மருத்துவர்கள், தனியார் நிறுவனங்கள், விவசாய தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநில அரசு மற்றும் பெஸ்காம் நிர்வாகம், தொகுதி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தாசில்தாரை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். அதை வாங்கிய தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்