டீசல் வினியோகம் நிறுத்தம் ;பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் போக்குவரத்தில் தடங்கல் வருமா?

டீசல் வினியோகம் நிறுத்தப்பட்டு இருப்பதால் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் போக்குவரத்தில் தடங்கல் வருமா? என்பது குறித்து அதன் நிர்வாக இயக்குனர் சத்தியவதி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-06-28 17:18 GMT

பெங்களூரு:

ரூ.70 கோடி வரை பாக்கி

பெங்களூருவில் சுமார் 7 ஆயிரம் பி.எம்.டி.சி.(பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்) பஸ்கள் ஓடுகின்றன. பெங்களூரு நகரில் 20-க்கும் மேற்பட்ட பணிமனைகள் இருக்கின்றன. அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த பணிமனைகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக டீசல் வினியோகம் செய்து வந்தன. சந்தையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.87 ஆக உள்ளது. ஆனால் பி.எம்.டி.சி. பணிமனைகளுக்கு ஒரு லிட்டர் ரூ.119-க்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகின்றன.

மேலும் பி.எம்.டி.சி. பணிமனைகள், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.70 கோடி வரை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாக்கியை பட்டுவாடா செய்யாததால் எண்ணெய் நிறுவனங்கள் பணிமனைகளுக்கு டீசல் வினியோகம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பி.எம்.டி.சி. பஸ் பணிமனைகளுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சந்தை விலையில் டீசல் வினியோகம் செய்து வந்தன. இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவ்வாறு டீசலை வினியோகம் செய்வது விதிமுறைகளை மீறும் செயல் ஆகும் என்றும், உரிமத்தை ரத்து செய்வோம் என்றும் அந்த நிறுவனங்கள் எச்சாிக்கை விடுத்துள்ளன.

டீசல் வினியோகம்

இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பணிமனைகளுக்கு நேரடியாக மொத்தமாக டீசல் வினியோகம் செய்வதை நிறுத்திவிட்டன. இதையடுத்து பி.எம்.டி.சி. பஸ்கள், தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்து டீசல் நிரப்பி வருகின்றன. இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போதிய அளவில் டீசல் கிடைக்காததால் நகரில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நகரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு சரியான முறையில் தேவைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசலை எண்ணெய் நிறுவனங்கள் வினியோகம் செய்வது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் நகரில் ஒருசில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெட்ரோல்-டீசல் இருப்பு இல்லை என்று தகவல் பலகையை வைத்து வருகின்றன. இதுகுறித்து பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் சத்தியவதி கூறியதாவது:-

பிரச்சினைக்கு தீர்வு

எங்கள் பஸ் பணிமனைகளுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் டேங்கர் லாரிகள் மூலம் டீசல் வழங்கி வந்தன. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்ததால் அந்த நிலையங்கள் டீசல் வினியோகத்தை நிறுத்திவிட்டன. எண்ணெய் நிறுவனங்கள் டீசல் ஒரு லிட்டர் ரூ.119 என்று விலை நிர்ணயித்துள்ளது. ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் லிட்டர் ரூ.87-க்கு கிடைக்கிறது. சில்லரையில் டீசல் வாங்குவதால் எங்களுக்கு ஒரு லிட்டருக்கு 30 ரூபாய் வரை மிச்சமாகிறது.

ஆனால் பி.எம்.டி.சி. பஸ்கள் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கும் நிலையை எண்ணெய் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள இயக்குனர் ராதிகாவை நியமித்துள்ளேன். அவர் போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வார். பி.எம்.டி.சி. பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்.

இவ்வாறு சத்தியவதி கூறினார்.

பாக்கி பி.எம்.டி.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ''எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கியை வழங்குவதாக உறுதி அளித்தோம். இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் இன்று (நேற்று) டீசல் வழங்கியது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்