முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போர்க்கொடி: காணவில்லை என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
பிரவீன் நெட்டார் படுகொலை விவகாரத்தை கண்டுகொள்ளாத முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவரை காணவில்லை என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
பிரவீன் நெட்டார் படுகொலை
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. பா.ஜனதாவினர், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதானந்தகவுடாவை தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் வசைபாடியுள்ளனர்.
போஸ்டர் ஓட்டியதால் பரபரப்பு
அதாவது சதானந்தகவுடாவின் சொந்த ஊர் தட்சிண கன்னடா ஆகும். ஆனால் அவர் பிரவீன் நெட்டார் இறுதிச்சடங்கு உள்பட இந்த விவகாரத்தில் எந்தவொரு இடத்திலும் முகம் காட்டவில்லை. இந்த விவகாரத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கொதிப்படைந்த பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் 'எங்கள் ஊரில் சதானந்தகவுடா என்று ஒருவர் இருந்தார். அவர் இப்போது பூமியில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை காணவில்லை. அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பது யாருக்காவது தெரியுமா?. ஏனெனில் அவரது சொந்த ஊரில் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றி அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அவரது தொலைபேசி எண், செல்போன் எண் யாரிடமாவது இருந்தால் கொடுங்கள். நானாவது அவருக்கு தகவலை தெரிவிக்கிறேன்' என்று கூறி வாட்ஸ்-அப்பில் தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் இதே வாசகங்களைக் கொண்டு போஸ்டர்களும் அச்சடித்து ஒட்டியுள்ளனர். சதானந்தகவுடாவுக்கு எதிராக பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் போர்க்கொடி தூக்கி வருவதால் தட்சிண கன்னடாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.