ராமநகர் அருகே பயங்கரம்: காவிரி ஆற்றில் தள்ளி பெங்களூரு பெண் கொலை

ராமநகர் அருகே, வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் காவிரி ஆற்றில் தள்ளி, பெங்களூரு பெண்ணை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-06-05 16:34 GMT

ராமநகர்:

வரதட்சணை கொடுமை

பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் மங்களா (வயது 33). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லக்கப்பா என்பவருடன் திருமணம் நடந்து இருந்தது. லக்கப்பா, ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார். திருமணத்தின் போது லக்கப்பாவுக்கு, மங்களாவின் வீட்டினர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்து உள்ளனர். ஆனாலும் கடந்த சில மாதங்களாக கூடுதலாக வரதட்சணை கேட்டு மங்களாவை, லக்கப்பா அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மங்களாவை, லக்கப்பா ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாதுவுக்கு அழைத்து சென்று இருந்தார். பின்னர் அங்கு வைத்து வரதட்சணை வாங்கி வருவது தொடர்பாக 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லக்கப்பா, மங்களாவை பிடித்து காவிரி ஆற்றில் தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் ஆற்றில் மூழ்கி மங்களா பரிதாபமாக இறந்து விட்டார்.

கணவர் கைது

இந்த சம்பவம் குறித்து மங்களாவின் சகோதரர் குருமூர்த்தி சாத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மங்களாவின் உடலை மீட்கும் பணியில் போலீசார், நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் இருந்து மங்களாவின் பாதி உடல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. மீதி உள்ள உடலை முதலை சாப்பிட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

மீட்கப்பட்ட மங்களாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாத்தனூர் போலீசார் லக்கப்பா மீது வரதட்சணை சாவு (304பி), வரதட்சணை கொடுமை (498ஏ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்