பெல்தங்கடி; மினி லாரி மோதி சிறுவன் பலி
பெல்தங்கடி அருகே மினிலாரி மோதி சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு-
பெல்தங்கடி அருகே மினிலாரி மோதி சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மினிலாரி மோதியது
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பரங்கி அருகே அர்ஹிலா பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் முகமது ரம்சீன் (வயது 10). இவன் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் அந்தப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். பின்னா் அவர், அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான்.
அப்போது லைலா சந்திப்பு பகுதியில் முகமது ரம்சீன் சாலையை கடக்க முயன்றான். இந்த சமயத்தில் உஜ்ரியில் இருந்து ெபல்தங்கடி நோக்கி வேகமாக வந்த மினிலாரி ஒன்று சிறுவன் முகமது ரம்சீன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ரம்சீன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினான். விபத்து நடந்ததும் டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார்.
சிறுவன் சாவு
இந்த விபத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவன் முகமது ரம்சீனை மீட்டு சிகிச்சைக்காக பெல்தங்கடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் முகமது ரம்சீனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் முகமது ரம்சீன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்தங்கடி போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவன் முகமது ரம்சீனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவர் வேனூரை சேர்ந்த ஜெயா என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.