நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு; கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மந்திரிசைபயை மாற்றி அமைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-10-20 18:45 GMT

பெங்களூரு -

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மந்திரிசைபயை மாற்றி அமைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்சியை கவிழ்க்க சதி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கு 2½ ஆண்டுகளும், டி.கே.சிவக்குமார் 2½ ஆண்டுகளும் வழங்க காங்கிரஸ் தலைமை ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

இதனால் 2½ ஆண்டுகளுக்கு பின்பு மந்திரிசபை மாற்றியமைக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களே பேசி வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 5 மாதத்திலேயே மூத்த எம்.எல்.ஏ.க்கள் பலர் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

மந்திரிசபை மாற்றியமைப்பு

இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை தொடர்பு கொண்டு அவர் பேசி வருவதாகவும், அடுத்த மந்திரிசபை மாற்றியமைப்பின் போது மந்திரி பதவி வழங்குவதாகவும் கூறி சமாதானப்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

மேலும் முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் காங்கிரஸ் அரசு கவிழும் என்று தொடர்ந்து கூறி  வருகிறார்கள்.

இதையடுத்து, அதிருப்தியில் இருக்கும் எம்எல்.ஏ.க்களை தக்க வைக்கவும், ஆட்சி கவிழ்க்கும் சதியை முறியடிக்கவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மந்திரிசபையை மாற்றியமைக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவுக்கு வருகை தந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது மந்திரிசபை மாற்றியமைப்பு மற்றும் வாரிய தலைவர் பதவிகளை நிரப்புவது குறித்து விரிவாக பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனெனில் மாநிலத்தில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மற்றொரு புறம் மந்திரி பதவி, வாரிய தலைவர் பதவி வழங்காததால் பல மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடிக்க மந்திரிசபையை மாற்றியமைக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆட்சியை தக்க வைக்க...

பா.ஜனதாவை சேர்ந்த ஒரு தரப்பினர் காங்கிரசுக்கு கட்சி தாவி வந்தாலும், மற்றொரு புறம் மந்திரி பதவி கிடைக்காமல் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தலைவர்கள் தொடர்பு கொணடு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சுதாரித்து கொண்ட காங்கிரஸ் தலைமை, ஆபரேசன் தாமரையில் எம்.எல்.ஏ.க்கள் சிக்காமல் இருக்க மந்திரிசபையை மாற்றியமைக்க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது..

இதுபற்றி தகவல் வெளியானதும் மந்திரிசபை மாற்றியமைத்தால் வரவேற்போம், எங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மந்திரிசபையை மாற்றியமைக்க சாத்தியமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்