பள்ளி மாணவா்களுக்கு 'ஷூ-சாக்ஸ்' வழங்காமல் பசவராஜ் பொம்மை தூங்கி கொண்டு இருக்கிறார்; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு
பள்ளி மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ்கள் வழங்காமல் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தூங்கி கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சிதலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.;
பெங்களூரு:
கோலாரில் போட்டியிடும்படி...
பெங்களூருவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வீட்டுக்கு காலையில் கோலார் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தனர். மேல்-சபை உறுப்பினர் நஜீர் அகமது தலைமையில் வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், சித்தராமையாவை சந்தித்து பேசினார்கள். அப்போது அடுத்த ஆண்டு(2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சித்தராமையாவை வலியுறுத்தினார்கள்.
அப்போது சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் பார்க்கலாம் என்று சித்தராமையா கூறியதாக தெரிகிறது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் பாதாமிக்கு பதில் கோலாரில் போட்டியிட சித்தராமையாவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பசவராஜ் பொம்மை தூக்கம்
நான் முதல்-மந்திரியாக இருந்த போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 'ஷூ - சாக்ஸ்' வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தேன். தற்போது பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு 'ஷூ-சாக்ஸ்' வழங்கும் திட்டத்தை நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் திறந்து ஒருமாதம் ஆகிறது. இன்னும் மாணவ, மாணவிகளுக்கு 'ஷூ-சாக்ஸ்' வழங்கவில்லை.
மாணவர்களுக்கு 'ஷூ-சாக்ஸ்' வழங்காமல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தூங்கி கொண்டு இருக்கிறார். அமர்நாத் கோவில் புனித யாத்திரைக்கு சென்ற கன்னடர்கள் சிக்கி இருப்பது பற்றி தகவல்கள் வந்துள்ளது. அவர்களை பாதுகாப்பாக கர்நாடகத்திற்கு அழைத்து வர மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.