பெங்களூரு வெடி விபத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை-கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் கடந்த 7-ந் தேதி பட்டாசு கடை மற்றும் குடோனில் பயங்கர வெடி விபத்து நடந்தது.;
பெங்களூரு:-
14 பேர் பலி
இந்த பயங்கர வெடி விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உள்பட 14 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கர்நாடகத்தில் பட்டாசு விபத்துகள் நடப்பதை தடுக்க அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள கிருஷ்ணா அலுவலக இல்லத்தில் மாநிலத்தில் பட்டாசு விபத்துகள் நடைபெறுவதை தடுப்பது, இதற்காக எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ், தீயணைப்பு உள்ளிட்ட பல துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
அலட்சியமாக இருக்கக் கூடாது
அப்போது முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
அத்திப்பள்ளியில் நடந்த வெடி விபத்து சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் குடோன்களில் சேமித்து வைக்க உரிமம் பெற்றுள்ள ஒவ்வொரு நபருக்கு சொந்தமான இடத்திலும் போலீசார், தீயணைப்பு துறையினர் கண்டிப்பாக பரிசீலனை நடத்த வேண்டும். உரிமம் பெற்றவர்கள் விதிமுறைகளை மீறி இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசு கடைகள் விற்பனைக்கு உரிமம் கொடுக்கும் போது தாசில்தார், போலீசார், தீயணைப்பு துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் பட்டாசு விபத்து நடந்ததால் பெரியஅளவில் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படுவதால் இந்த விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் அதிகாரிகள் அலட்சியமாக இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகள், குடோன்களில் சோதனை
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பட்டாசு கடைகள், குடோன்களில் சோதனை நடத்தி, அங்குள்ள பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும். பெங்களூருவில் மட்டும் 2 விதமாக உரிமம் வழங்கப்படுகிறது. தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம், சட்டம்-ஒழுங்கு போலீஸ் தரப்பில் இருந்து மற்றொரு உரிமமும் வழங்கப்படுகிறது, இந்த உரிமத்தை 5 ஆண்டுக்கு பதில் ஓராண்டாக குறைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு முறையான கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்படும்
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பட்டாசு வெடிக்க தடை
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அத்திப்பள்ளி-ஓசூர் எல்லையில் உள்ள பட்டாசு விற்பனை கடைகள், குடோன்களை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பட்டாசு விற்பனை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கண்டிப்பாக அதிகாரிகள் பின்பற்றி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அத்திப்பள்ளியில் பட்டாசு விபத்து நடந்திருப்பதால், மாநிலத்தில் பொது நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. திருமணம், அரசியல் விழாக்கள், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளின் போது பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. அதையும் மீறி பட்டாசுகள் வெடித்தால்
சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓராண்டுக்கு மட்டுமே உரிமம்
தீபாவளி பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காலை மற்றும் மாலை தலா ஒரு மணி நேரம் மாநிலம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்.
சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பசுமை பட்டாசுகள் மட்டும் தீபாவளிக்கு 2 மணி நேரம் வெடிக்கலாம். மாநிலத்தில் தற்போது பட்டாசு விற்பனை செய்ய, குடோன்கள் அமைத்து சேமித்து வைக்க 5 ஆண்டுகள் உரிமம் வழங்கப்படுகிறது.
இனிமேல் ஒரு விற்பனையாளர் உரிமம் வாங்கினால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதற்கு பதில், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். உரிமம் அனுமதி ஒரு ஆண்டு மட்டுமே ஆகும். அரசின் விதிமுறைகளை மீறினால் பட்டாசு விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.