காகிதம் இல்லா சட்டசபையை உருவாக்கும் திட்டத்தில் ஊழல் செய்ய முயற்சி; காங்கிரஸ் குற்றச்சாட்டு

காகிதம் இல்லா சட்டசபையை உருவாக்கும் திட்டத்தில் ஊழல் செய்ய முயற்சி நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2022-06-23 15:07 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரமேஷ்பாபு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் முறையிட்டேன்

ரூ.254 கோடி வரையிலான காகிதம் இல்லா சட்டசபையை உருவாக்கும் திட்டத்தில் கர்நாடக சட்டசபை செயலாளர் மட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செயலாளருக்கு கடிதம் எழுதினேன். இதுகுறித்து நேரிலும் நான் முறையிட்டேன். சட்டசபை சபாநாயகராக காகேரி உள்ளார். காகிதம் இல்லாத சட்டசபையை உருவாக்கும் பணி ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களின் பாக்கெட்டை நிரப்பி கொள்ள சிலர் முயற்சி செய்துள்ளனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு, மின் ஆட்சி நிர்வாக திட்டத்தை செயல்படுத்துவதாகவும், அதற்கு மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதி வழங்குவதாகவும் கூறப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடகம் முன்வருவதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு காகித பயன்பாடு இல்லாத சட்டசபை குறித்து சபாநாயகருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

லோக்அயுக்தாவில் புகார்

ரூ.254 கோடி திட்டத்திற்கு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்காக ரூ.152 கோடி மத்திய அரசிடம் இருந்து வருகிறது. மாநில அரசு தனது பங்காக ரூ.101 கோடி வழங்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் வருமானம் வராது என்று நினைத்து, காகித பயன்பாடு இல்லாத பணியை தனியாருக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தனியாருக்கு வழங்குவதை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் லோக்அயுக்தாவில் புகார் அளிப்போம்.

இவ்வாறு ரமேஷ்பாபு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்