செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்
எதிர்கால பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய மேலாண்மை கல்லூரி பொன்விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.;
பெங்களூரு:-
ஜனாதிபதி வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். பகல் 3.30 மணியளவில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள இந்திய மேலாண்மை கல்லூரி (ஐ.ஐ.எம்.) பொன் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை கல்லூரி நிறுவனம் நிர்வாக திறன்களையும், அதற்கான வளங்களையும் உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மேலாளர்களை மட்டும் உருவாக்கவில்லை, தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறவர்களை உருவாக்கியுள்ளது. பிரச்சினைகள், சவால்களுடன் பணியாற்றும் இடங்களில் மட்டுமின்றி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எதிர்கொள்ளும் வகையில் இங்கு சிறந்த கல்வி போதிக்கப்படுகிறது.
ஆழமான தாக்கம்
இந்த ஐ.ஐ.எம். நிறுவனம் தொடக்கத்தில் இருந்தே, தொழில்முறை, செயல்திறன் மற்றும் திறமை ஆகியவை வரையறுக்கும் அம்சங்களை கொண்டுள்ளன. இது புதுமை மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முன்னோடியாக திகழ்வதுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் உற்சாகமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது 4-வது தொழில் புரட்சியின் காலம். இந்த ஐ.ஐ.எம். நிறுவனம் தரவு மையம் மற்றும் 'அனலிட்டிகல்' ஆய்வகம் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பெரிய தரவு மற்றும் எந்திர கற்றல் ஆகிய துறைகளில் செய்யப்படும் பணிகள், வணிகம் மற்றும் எதிர்கால பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.சிறப்பான மற்றும் திறமைக்கு பெயர் பெற்ற ஐ.ஐ.எம். பெங்களூரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனம் திறமைகளின் விருப்பங்களும், நல்ல நோக்கங்களும் சந்திக்கும் இடமாக திகழ்கிறது. வணிக நெறிமுறைகளுக்கு முரணாக இல்லாத மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் பாடங்களை இங்கு படிக்கும் மாணவர்கள் உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும். நெறிமுறைகள் இல்லாத வெற்றியை காந்தி பாவமாக கருதினார்.
நல்லிணக்கம்-நம்பிக்கை
இங்கு படிப்பவர்கள் தொழில்ரீதியாகவும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பெரிய இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள். பரம்பரை பரம்பரையாக உள்ள உலகத்தைப் பற்றி நீங்கள் குறை கூறாமல், வருங்கால சந்ததியினர் நல்லிணக்கம், நம்பிக்கை, செழிப்பு மற்றும் சமத்துவத்துடன் வாழக்கூடிய உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும்.
இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்.
அதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா, தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.