ஊழல் தடுப்பு படைக்கு கறை படியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஊழல் தடுப்பு படைக்கு ஊழல் கறை படியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2022-07-11 22:41 IST

பெங்களூரு:

சரியாக செயல்படவில்லை

பெங்களூரு நகர மாவட்ட கலெக்டராக பணியாற்றிய மஞ்சுநாத்தை லஞ்ச வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர். அவர் ஜாமீன் வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை என்று கூறி ஊழல் தடுப்பு படை அதிகாரி சீமந்த்குமார் சிங் குறித்து நீதிபதி கடுமையாக குறை கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல் வந்ததாகவும் நீதிபதி கூறினார். இந்த நிலையில் இந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணை 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி சந்தேஷ் கூறியதாவது:-

அழுத்தம் இருக்க கூடாது

கர்நாடக ஊழல் தடுப்பு படைக்கு ஊழல் கறை படியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தலைமை செயலாளர் உரிய கவனம் செலுத்த வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் ஊழல் தடுப்பு படை உருவாக்கப்பட்டது. அதனால் அந்த அமைப்புக்கு நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்து அதன் கண்ணியத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.

அந்த அமைப்பில் அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் மீது நம்பத்தன்மை இருக்க வேண்டும். அவற்றுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போது அவர்களின் கடந்த கால பணி வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும்.எந்த நெருக்கடிக்கும் அடிபணியாமல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதிகாரிகளின் நியமனத்தின் பின்னணியில் யாருடைய அழுத்தமும் இருக்க கூடாது. அந்த அதிகாரிகள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இருக்க கூடாது.

இவ்வாறு நீதிபதி சந்தேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்