தீர்த்தத்துடன் சேர்த்து, 50 கிராம் கிருஷ்ணர் சிலையை விழுங்கிய வியாபாரி- அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் வெளியே எடுத்தனர்
பெலகாவி அருகே தீர்த்தத்துடன் சேர்த்து 50 கிராம் கிருஷ்ணர் சிலையை வியாபாரி விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. அந்த சிலையை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் வெளியே எடுத்துள்ளனர்.;
பெங்களூரு:
சிலையை விழுங்கிய வியாபாரி
பெலகாவி மாவட்டத்தில் 45 வயது நபர் வசித்து வருகிறார். வியாபாரியான அவர் தினமும் தனது வீட்டில் உள்ள சாமியை வழிபடுவது வழக்கம். அப்போது சாமிக்காக வைக்கப்படும் தீர்த்தத்தை எடுத்து அவர் குடிப்பது வழக்கம். அதுபோல், சாமி தரிசனம் செய்து விட்டு பூஜை அறையில் ஒரு பாத்திரத்தில் வைத்திருந்த தீர்த்தத்தை எடுத்து அந்த நபர் குடித்துள்ளார். அப்போது அதற்குள் ஒரு கிருஷ்ணர் சிலை கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் தீர்த்தத்துடன் சேர்த்து வியாபாரி விழுங்கி விட்டார்.
அதுபற்றி அவருக்கு முதலில் தெரியவில்லை. பின்னர் திடீரென்று அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிறும் பெரிதாக ஊத தொடங்கி உள்ளது. இதன் காரணமாக என்ன காரணத்திற்காக வயிறு வலிக்கிறது என்று பார்த்துள்ளனர். அப்போது பூஜை அறையில் இருந்த 50 கிராம் எடை கொண்ட கிருஷ்ணர் சிலை இல்லாததால், அது தீர்த்தம் இருந்த பாத்திரத்திற்குள் விழுந்து இருக்கலாம் என்றும், அதனை விழுங்கியதால் வயிறு வலிப்பதையும் வியாபாரியின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.
அறுவை சிகிச்சை மூலமாக...
உடனடியாக பெலகாவியில் உள்ள கே.எல்.இ. ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றார்கள். அங்கு கிருஷ்ணர் சிலையை விழுங்கிய இருப்பதாக கூறியதை டாக்டர்களும் முதலில் நம்பவில்லை. பின்னர் அந்த நபருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றுக்குள் கிருஷ்ணர் சிலை இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வியாபாரியின் வயிற்றில் இருந்து கிருஷ்ணர் சிலையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தார்கள்.
அதன்படி, நேற்று முன்தினம் அந்த ஆஸ்பத்திரியில் வியாபாரிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. பின்னர் அந்த சிலையை டாக்டர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தார்கள். அந்த சிலை 5 சென்டி மீட்டருடன், 50 கிராம் எடையுடன் இருப்பதாக டாக்டா்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வியாபாரி ஆரோக்கியமாக இருக்கிறார். அந்த வியாபாரி தீர்த்தத்துடன் சேர்த்து எப்படி சிலையை விழுங்கினார் என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.