தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
பெங்களூரு அருகே அண்ணியுடனான கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த அண்ணன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.;
பெங்களூரு:-
அண்ணியுடன் கள்ளத்தொடர்பு
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தொட்ட பெலவங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கங்கராஜ் (வயது 36). இவரது மனைவி பாக்கியம்மா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கங்கராஜின் சகோதரர் ரவி. தொழிலாளியான இவருக்கும், தனது அண்ணியுமான பாக்கியம்மாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ரவியுடன் கங்கராஜ் தகராறு செய்து வந்தார்.
இதையடுத்து, கடந்த 5 ஆண்டுக்கு முன்பாகவே ரவியும், பாக்கியம்மாவும் வீட்டை விட்டு ஓடிவிட்டார்கள். இதனால் தனது குழந்தைகளை அனாதை ஆசிரமத்தில் கங்கராஜ் சேர்த்திருந்தார். இதற்கிடையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரவியும், பாக்கியம்மாவும் கிராமத்திற்கு திரும்பி வந்தனர். இதனால் சகோதரர், மனைவியுன் கங்கராஜ் மீண்டும் தகராறு செய்தார். கடந்த 15 நாட்களாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது.
அண்ணன் கொலை
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தலை நசுங்கியபடி ரத்த வெள்ளத்தில் கங்கராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் தொட்டபெலவங்களா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கங்கராஜ் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ரவியும், பாக்கியம்மாவும் தலைமறைவாகி விட்டனர். இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கங்கராஜை கொலை செய்துவிட்டு ரவியும், பாக்கியம்மாவும் தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தொட்ட பெலவங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.