பஸ் நிறுத்த நிழற்குடை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம்

பெங்களூரு கன்னிங்காம் ரோட்டில் பஸ் நிறுத்த நிழற்குடை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த நிழற்குடை தரமற்ற முறையில் அமைத்திருந்ததால் மாநகராட்சி நிர்வாகமே அகற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2023-10-10 21:29 GMT

பெங்களூரு:-

காணாமல் போன பஸ் நிறுத்தம்

பெங்களூரு கன்னிங்காம் ரோட்டில், கடந்த ஆகஸ்டு மாதம் பஸ் பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. அதாவது ரூ.10 லட்சம் செலவில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த பஸ் நிறுத்த நிழற்குடை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் விதானசவுதா (சட்டசபை) கட்டிடத்தில் இருந்து அருகில் அமைந்திருந்தது. இந்த நிலையில் பஸ் நிறுத்த நிழற்குடை திறக்கப்பட்டு ஒருவாரம் ஆகியிருந்த நிலையில், அது திடீரென்று காணாமல் போனது. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்பட்டது.

போலீசில் புகார்

இதனால் பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாமல் அந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் மழை-வெயிலில் கால்கடுக்க காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது. பஸ் நிறுத்த நிழற்குடை இருக்கைகளுடன் திடீரென காணாமல் போனது பற்றி அதனை அமைத்து கொடுத்த தனியார் நிறுவனத்தின் உதவி தலைவர் என்.ரவி ஷெட்டி என்பவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் ரூ.10 லட்சம் செலவில் அமைத்த நிழற்குடை இருக்கைகளுடன் திருட்டுப்போய் விட்டதாக ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். இதனால் பஸ் நிறுத்த நிழற்குடை இருக்கைகளுடன் காணாமல் போன விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீர் திருப்பம்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அத்துடன் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு மாநகராட்சி அதிகாாிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்களே அந்த பஸ் நிறுத்த நிழற்குடையை அகற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏனெனில் அந்த நிழற்குடையை தரமற்ற முறையில் அமைத்து இருந்ததாகவும், இதனால் அதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்ததும் தெரியவந்துள்ளது.

பயணிகள் கோரிக்கை

இதன் மூலம் நிழற்குடை இருக்கைகள் திருட்டு போனதாக கூறப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலில் பாதிக்கப்படுவதாகவும், கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் தொடருவதாகவும், எனவே உடனே பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்