கவர்னர் முன்னிலையில் நடந்த போலீஸ் சாகச நிகழ்ச்சி
தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகளை கவர்னர் தாவர்சந்த் கெலாட் கண்டு ரசித்தார்.
மைசூரு:-
மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று மாலை 5.09 மணிக்கு தொடங்கி இரவு 7.15 மணிக்கு பன்னிமண்டபம் தீப்பந்து விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. அதையடுத்து இரவு 7.30 மணிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் தீப்பந்து சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் போலீஸ் ஆண்கள் படை, மகளிர் போலீஸ் படை, ஆயுதப்படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை, கமாண்டோ படை உள்பட பல்வேறு படைகளின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக் கொண்டார். பின்னர் போலீஸ் படையினரால் மோட்டார் சைக்கிள்கள் மூலமாக பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் குதிரைகள் மூலமாக சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் தீப்பந்த வளையங்களுக்குள் போலீஸ் மோப்ப நாய்கள் துள்ளி குதித்து தாண்டுவது உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும், போலீசாரும் தீப்பந்த வளையங்களுக்குள் மோட்டார் சைக்கிள் மூலம் புகுந்து தாண்டுவது போன்ற சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுதவிர தீயுடன் பல்வேறு சாகசங்களை போலீசார் நிகழ்த்தி காட்டினர். அதன்பின்னர் லேசர் ஒளிக்கதிர்களின் கண்கவர் லைட் ஷோ நிகழ்ச்சி நடந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதை அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். அதுபோல் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரும் கண்டு ரசித்தனர். இந்த சாகச நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கை ஆகியவை சுமார் 2 மணி நேரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.