கூண்டில் சிக்கிய சிறுத்தை செத்தது
மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கூண்டில் சிக்கிய சிறுத்தை செத்தது
கோலார்:
கோலார் தாலுகா காஜிஹல்லஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், பீதியடைந்த அந்தப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கொண்ட வனத்துறையினர், அந்த சிறுத்தையை பிடிக்க கிராமத்தையொட்டி உள்ள மலைப்பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்தது. ஆனால், அந்த மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கூண்டுடன் மண்ணுக்கு அடியில் சிறுத்தை சிக்கி கொண்டது. இதில் மூச்சுத்திணறி அந்த சிறுத்தை பரிதாபமாக செத்தது. முன்னதாக அந்த சிறுத்தையை மீட்க வனத்துறையினர் முயன்றனர். ஆனாலும், வனத்துறையினரின் முயற்சி தோல்வி அடைந்தது.