ஓட்டலில் தீவிபத்து

சிலிண்டரை மாற்றியபோது கியாஸ் கசிவால் ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ஓட்டல்

Update: 2023-10-21 18:45 GMT

முல்பாகல்:

சிலிண்டரை மாற்றியபோது கியாஸ் கசிவால் ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

ஓட்டல்

கோலார் மாவட்டம் முல்பாகல் டவுன் பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவர் முல்பாகல் அருகே உள்ள தாதிபாலியா கிராமத்தில் சாலையோரம் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். நேற்று காலை அந்த ஓட்டலில் வழக்கம்போல் விற்பனை நடந்து கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். காலை 10 மணியளவில் ஓட்டலில் ஒரு கியாஸ் சிலிண்டர் காலியாகி விட்டது. இதையடுத்து சங்கர் வேறு கியாஸ் சிலிண்டரை மாற்ற முயன்றார். அப்போது அந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டது.

பதற்றம்

இதனால் பதற்றம் அடைந்த சங்கர் உடனடியாக தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் தீ மளமளவென அங்கிருந்த பொருட்கள் மீது பரவி எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் ஓட்டலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீயை அணைக்க முடியாத சங்கரும், ஓட்டலில் இருந்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்.

பின்னர் தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பதற்றம் அடைந்த சங்கர் இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.

ரூ.3 லட்சம்...

பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தால் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. ஓட்டலில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து முல்பாகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்