கர்நாடக அணைகளில் இருந்து 86 ஆயிரம் கன அடி நீர் திறப்பு காவிரியில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 86 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.;

Update:2022-08-13 22:10 IST

மண்டியா:

கிருஷ்ணராஜசாகர் அணை

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. அதுபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே உள்ள கபினி அணையும் நிரம்பி உள்ளன. இதில் கே.ஆர்.எஸ். அணை காவிரியின் குறுக்கேயும், கபினி அணை கபிலா

ஆற்றின் குறுக்கேயும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 123.38 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 72 ஆயிரத்து 169 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 56 ஆயிரத்து 252 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது.

தமிழகத்துக்கு காவிரியில்...

அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282.40 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது.

இவ்விரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒன்றாக சங்கமித்து அகன்ற காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி நேற்று இவ்விரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 86 ஆயிரத்து 252 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

கரையோர மக்களுக்கு...

தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலய பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. படகு சவாரியும் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்