பெங்களூருவில் ரூ.6,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

ரூ.6 ஆயிரம் கோடியில் பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-05-27 14:41 GMT

பெங்களூரு:

மிகப்பெரிய முதலீடு

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 6 நாட்கள் சுற்றுப்பயணமாக சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகருக்கு சென்றார். அங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் விமானம் மூலம் பெங்களூரு திரும்பினார். விமான நிலையத்தில் அவரை மின்துறை மந்திரி சுனில்குமார் வரவேற்றார். தனது பயணம் குறித்து பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு பெங்களூரு வந்துள்ளேன். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து பேசினேன். சுமார் ரூ.60ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இது மிகப்பெரிய முதலீடு ஆகும். இது கர்நாடகத்தின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தொழில் தொடங்க ஆர்வம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி தொடர்பாக ரினியூ நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. லூலூ குழுமம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. ஆக மொத்தம் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இதுதவிர சீமெண்ஸ், இடாசி, டசால்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கர்நாடகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன.

உப்பள்ளி-தார்வார், துமகூரு, மைசூருவில் தொழில் தொடங்கினால் அரசு கூடுதல் சலுகைகளை வழங்கும் என்று நிறுவனங்களிடம் கூறியுள்ளோம். பார்தி நிறுவனம் கூடுதலாக ஒரு தகவல் மையத்தை அமைக்க ஒப்புகொண்டுள்ளது. மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் ஈஷா பவுண்டேசன் தலைவர் சத்குரு வாசுதேவை சந்தித்து பேசினேன்.

நல்ல வரவேற்பு

செமிகண்டக்டர் (மின் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஷிப்புகள்), ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்திக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். அங்கு இந்தியாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் கர்நாடகத்தில் தொழில் தொடங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. கர்நாடகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மழையின்போது பெங்களூருவில் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று கூறுவது தவறு. பெரிய நகரங்களில் கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்படுவது இயல்பு தான். நாங்கள் இத்தகைய வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரூ.6 ஆயிரம் கோடியில் பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம். வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நடக்கிறது. அதற்கு முன்பாகவே நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த பேட்டியின்போது தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, வீட்டு வசதி துறை மந்திரி சோமண்ணா, பொதுப்பணி மந்திரி சி.சி.பட்டீல், தலைமை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்