அரண்மனையில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை தசரா யானைகளுக்கு, நடைபயிற்சி தொடங்கியது

மைசூரு அரண்மனையில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை தசரா யானைகளுக்கு, நடைபயிற்சி நேற்று தொடங்கியது.;

Update:2022-08-14 23:29 IST

மைசூரு:

தசரா விழா

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, அடுத்த மாதம்(செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா கட்டுக்குள் உள்ளதால் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் முதற்கட்டமாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 9 யானைகள், மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு கோட்டை அருகே உள்ள மைதானத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கடந்த 11-ந்தேதி தசரா யானைகளை, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எடைக்கருவி உள்ள இடத்திற்கு அழைத்து சென்று எடை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

நடைபயிற்சி

இந்த நிலையில் நேற்று தசரா யானைகளுக்கு நடைப்பயிற்சி தொடங்கப்பட்டது. அதன்படி காலை 7 மணி அளவில் அரண்மனை வளாகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைதூரத்தில் இருக்கும் பன்னி மண்டபம் தசரா தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 9 யானைகளையும் வரிசையாக அழைத்து சென்று நடைப்பயிற்சி கொடுக்கப்பட்டது. இதேபோல் மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை யானைகளை அழைத்து சென்று நடைபயிற்சி அளிக்கப்பட்டது.

யானைகளின் நடைபயிற்சி அரண்மனை வளாகத்தில் இருந்து சாமராஜா சர்க்கிள், கே. ஆர்.சர்க்கிள், சயாஜிராவ் ரோடு, ஹைவே சர்க்கிள், நெல்சன் மண்டேலா ரோடு வழியாக தசரா தீப்பந்து விளையாட்டு மைதானத்திற்கு சென்றது.

தசரா யானைகள் நடைபயிற்சியாக சென்ற சாலைகளில் போக்குவரத்து போலீசார், வாகனங்களை தடுத்து நிறுத்தி அவைகள் செல்ல அவகாசம் செய்துகொடுத்தனர். மேலும் பாதைகளில் ஆணி உள்ளிட்ட இரும்பு கம்பிகள் போன்றவை யானைகளின் கால்களை பதம் பார்க்காமல் இருக்க காந்தம் பொருத்தப்பட்ட வாகனம் முன்னால் சென்றது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து வரும் நாட்களில் பாரம் சுமக்கும் பயிற்சி, பீரங்கி வெடிகுண்டு சத்தம் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்