கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 4,500 கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து 2-வது நாளாக தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 4,500 கன அடியாக நீடிக்கிறது.
மைசூரு-
கர்நாடக அணைகளில் இருந்து 2-வது நாளாக தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 4,500 கன அடியாக நீடிக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையம்
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கபிலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மைசூருவில் உள்ள கபினி அணை மட்டும் நிரம்பியது.
மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை, ஹாசனில் உள்ள ஹேமாவதி அணை, குடகில் உள்ள ஹாரங்கி ஆகிய அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதுபோல் நேற்றும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3,704 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. 124.80 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 101.24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,550 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
2-வது நாளாக...
இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையின் நீர்மட்ட கொள்ளளவு நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,275.91 அடியாக(கடல் மட்டத்தில் இருந்து) இருந்தது.
இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284 அடி ஆகும். நேற்று காலையில் இந்த அணைக்கு வினாடிக்கு 1,743 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 4,504 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 4,501 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. நேற்று 2-வது நாளாக காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 4,500 கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.