கர்நாடகத்தில் வறட்சியால் ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்

கர்நாடகத்தில் வறட்சியால் ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-15 21:15 GMT

மைசூரு:-

தசரா விழா தொடக்கம்

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து அம்மனுக்கு மலர் தூவி திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இதில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் இந்த ஆண்டு வறட்சி காரணமாக தசரா விழாவை பாரம்பரிய முறைப்படி எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மழை காலத்திலாவது மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று சாமுண்டீஸ்வரி அம்மனிடம் வேண்டி உள்ளோம்.

அனைவரும் சமம்

நாடஹப்பா என்றழைக்கப்படும் மைசூரு தசரா விழாவை காண உலகம் முழுவதும் உள்ள மக்கள் வருகிறார்கள். இந்த விழா மூலம் கர்நாடகம் தனது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்கிறது. நமது மாநிலம் கலை, கலாசாரம் மற்றும் இசை வளம் வாய்ந்தது. கர்நாடக மக்கள் நல்ல கலாசாரம் கொண்டவர்கள். ஒவ்வொரு கன்னடரும் எந்த சாதி, மதமாக இருந்தாலும் அன்புடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டியது அவசியம். இது மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் ஒப்புகொள்ள வேண்டும்.

சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். வளங்களும், உரிமைகளும் மக்களுக்கு சமமாக கிடைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் சமூக நீதி என்கிறோம். அதற்காக தான் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.

யுவநிதி திட்டம்

நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்தோம். அதில் 4 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். 5-வது உத்தரவாத திட்டமான 'யுவநிதி' திட்டம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2021-23 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் தலா ரூ.1,500-ம் கிடைக்கும்.

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்து போனதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 216 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 195 தாலுகாக்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 21 தாலுகாக்களையும் சேர்த்து மொத்தம் 216 தாலுகாக்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்

மாநிலத்தில் 42 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வறட்சியால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகள்படி மத்திய அரசிடம் ரூ.4,860 கோடி கேட்டுள்ளோம். வறட்சி பகுதிகளை மத்திய குழு வந்து பார்வையிட்டுள்ளது. மக்களுக்கு குடிநீர், விவசாயத்துக்கு தண்ணீர், கால்நடைகளுக்கு தீவனம் ஆகியவற்றுக்கு மாநில அரசு மானியம் வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்