டெல்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு 30 அடி உயர சிலை

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு 30 அடி உயர சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை வடிவமைக்கும் பணியில் மைசூருவை சேர்ந்த சிற்பியும் ஈடுபடுகிறார்.

Update: 2022-06-02 16:40 GMT

மைசூரு:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை

சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவருக்கு 30 அடி உயர சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

அதன்படி தெலுங்கானா கிரானைட் கற்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் உயர சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை வடிவமைக்கும் பணியில் மத்திய கலாசாரத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் தேசிய நவீன கலை அருங்காட்சியகம் குழுவினரின் ஈடுபடுகின்றனர்.

மைசூரு சிற்பி

இந்த குழுவில் மைசூருவை சேர்ந்த அருண் யோகிராஜ்(வயது 37) என்பவரும் இடம் பெற்றுள்ளார். அருண் யோகிராஜ் குடும்பத்தினர் பரம்பரை சிற்ப கலைஞர்கள் ஆவார்கள். அதாவது 6 தலைமுறையாக அவரது குடும்பத்தினர் சிற்ப கலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பல்வேறு கோவில்களின் சாமி சிலைகளை வடிவமைத்து கொடுத்துள்ளனர். இதற்காக இவர்களது குடும்பத்தினர் பெயர் போனவர்கள்.

கேதார்நாத்தில், 12 அடி உயரமான சங்கராச்சாரியார் உருவச்சிலை செதுக்கும் பணியில் அருண் யோகிராஜ் ஈடுபட்டார். சங்கராச்சாரியார் சிலையை வடிவமைப்பை பார்த்து பிரம்மித்து போன பிரதமர் நரேந்திர மோடி, அருண் யோகிராஜை பாராட்டியுள்ளார். இதனால் அவருக்கு சுபாஷ் சந்திரபோஸ் சிலையை வடிவமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாராட்டுகள் குவிகிறது

இதற்காக அருண் யோகிராஜூம், பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அப்போது அவர், மோடியிடம் 2 அடி உயரத்தில் தானே வடிவமைத்த சுபாஷ் சந்திரபோஸ் சிலையை பரிசாக வழங்கினார். அதனை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு 30 அடி உயர சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபடும் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள் அதாவது சுதந்திர தினத்திற்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்