முன்னாள் போக்குவரத்து துறை அதிகாரி உள்பட 3 பேர் கைது: விசாரணையில் பரபரப்பு தகவல்

சொகுசு கார்களுக்கு வரி செலுத்தாமல் முறைகேடு செய்த வழக்கில், முன்னாள் போக்குவரத்து துறை அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-07 17:31 GMT

பெங்களூரு:

உரிமையாளர்களுக்கு நோட்டீசு

பெங்களூருவில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் வரி செலுத்தியது போன்று போலியாக சான்றிதழ்கள் பயன்படுத்தி சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மல்லேசுவரம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே வரி செலுத்தாமல் சொகுசு கார்களை பதிவு செய்ததாக கார்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை நோட்டீசு அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் நோட்டீசு பெறப்பட்ட கார்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சிலர் மீது புகார் அளித்து வருகின்றனர். அதுதொடர்பாக தனித்தனியாக வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முறைகேடாக சொகுசு கார்களை பதிவு செய்ததாக பெங்களூருவில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதில் 200 பேர் முறையாக வரி செலுத்தி விட்டனர். ஆனால் சிலர், கார் வாங்குவதற்கு பணம் பெற்ற இடைத்தரகர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

3 பேர் கைது

இந்த வழக்குகள் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், கார் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய வாகனங்கள் விற்பனை பிரதிநிதி அஜெய், முன்னாள் போக்குவரத்து துறை அதிகாரி ரவிசங்கர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் 52 வாகனங்களை இதுபோன்று வரி செலுத்தாமல் முறைகேடாக விற்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்