தொழில் அதிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-10-18 18:45 GMT

உப்பள்ளி-

வெவ்வேறு சம்பவங்களில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தொழில் அதிபர்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியை சேர்ந்தவர் ரவி முர்கோட் (வயது45). தொழில் அதிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். ரவிக்கு சொந்தமாக கோகுல் ரோடு பகுதியில் இரும்பு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் ரவி இரும்பு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க 3-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ. 15 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரும்பு பொருட்கள் உற்பத்தியில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் வங்கிகளில் வாங்கிய கடனை ரவியால் திரும்ப செலுத்த முடியவில்லை. மேலும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பள தொகை கூட கொடுக்க முடியாமல் அவர் அவதி அடைந்து வந்தார். இந்தநிலையில் வங்கியில் இருந்து கடன் தொகையை கட்ட அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் ரவி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தனது நிறுவனத்திற்கு அவர் சென்றார்.

தற்கொலை

பின்னர் தனது அறைக்கு சென்று ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரவி தூக்கில் பிணமாக தொங்கியதை அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பார்த்து அதிர்்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனே கோகுல்ரோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேப்போல், சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஹரேநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (36). இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் மஞ்சுநாத் விவசாயம் செய்து வந்தார். இதற்காக அவர் வங்கி, நண்பர்களிடம் ரூ. 4 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது.

ஐ.டி.நிறுவனம்

மேலும் வாங்கிய கடனை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் மஞ்சுநாத் கவலையில் இருந்தார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மஞ்சுநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடுப்பி மாவட்டம் கார்கலா டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்லொட்டே பகுதியை சேர்ந்தவர் சார்வி (23). இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் சார்வி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது சார்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கார்கலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

விசாரணை

பின்னர் சார்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கார்கலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்த 3 சம்பவங்கள் குறித்து கோகுல்ரோடு, எகட்டி, கார்கலா ஆகிய போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்