காட்டுப்பூனைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுப்பூனைகளை வேட்டையாடிய 2 பேரை போலீசார கைது செய்தனர்.;
கொள்ளேகால்-
சாம்ராஜ்நகர் மாவட்ட பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் குண்டலுபேட்டை வனப்பகுதிக்கு உட்பட்ட பாபர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 5 பேர் கையில் ஆயுதங்கள், மூட்டைகள் மற்றும் துப்பாக்கிகள் ஆகிவற்றுடன் வந்தனர். வனத்துறையினரை பார்த்த அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டிச்சென்றனர். அதில் 2 பேர் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்கள் பன்னிதாளாபுரா கிராமத்தைச் சேர்ந்த மகாதேவ ஷெட்டி(வயது 50), மாதவஷெட்டி(50) என்பதும், தப்பி ஓடிய 3 பேரும் அவர்களது கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து 3 காட்டுப்பூனைகள், 4 காட்டுப்பூனை குட்டிகள் ஆகியவற்றை வேட்டையாடி உடல்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவ ஷெட்டி, மாதவஷெட்டி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் 3 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகிறார்கள்.