நஞ்சன்கூடுவில் லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நஞ்சன்கூடுவில், லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-06-19 17:00 GMT

மைசூரு:

வாகன சோதனை

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நஞ்சன்கூடு போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் சோதனை நடத்த நிறுத்தும்படி கையசைத்தனர்.

அப்போது போலீசாரை கண்டதும் சிறிது தூரத்திற்கு முன்பே லாரியை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த நபர்கள் தப்பி ஓடினர். இதைப்பார்த்த போலீசார், தப்பி ஓடிய நபர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து போலீசார், அதிகாரிகள் லாரியில் சோதனை நடத்தினர்.

15 டன் ரேஷன் அரிசி

அப்போது லாரியில் மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. நஞ்சன்கூடுவில் உள்ள ரேஷன் கடைகளில் சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அவற்றை விற்பனைக்காக கடத்த முயன்றது தெரியவந்தது. ஆனால் ரேஷன் அரிசியை கடத்திய மர்மநபர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

இதையடுத்து 15 டன் ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்