பட்டாசு விபத்தில் 14 பேர் பலி-சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது

பெங்களூரு அருகே பட்டாசு விபத்தில் 14 பேர் பலியானது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அத்திப்பள்ளிக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-09 22:19 GMT

பெங்களூரு:-

பட்டாசு விபத்தில் 14 பேர் பலி

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் கடந்த 7-ந் தேதி வெடி விபத்து நடந்திருந்தது. லாரியில் இருந்து பட்டாசுளை கீழே இறக்கிய போது தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறி இருந்தது. இந்த கோர விபத்தில் குடோனில் வேலை செய்து கொண்டிருந்த மாணவர்கள் உள்பட 14 பேர் உயிர் இழந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமிழ்நாடு தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பட்டாசு விபத்தில் காயம் அடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. பட்டாசு விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் ராமசாமி ரெட்டி, அவரது மகன் நவீன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சி.ஐ.டி. போலீஸ் விசாரணை

இந்த நிலையில், பட்டாசு விபத்து நடந்த பகுதியை நேற்றுமுன்தினம் பார்வையிட்ட முதல்-மந்திரி சித்தராமையா, அதுபற்றி சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு

இருந்தார். இதையடுத்து, சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.யான பிரவீன் மதுகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த தனிப்படையில் சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் மற்றும் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று காலையில் போலீஸ் ஐ.ஜி. பிரவீன் மதுகர் தலைமையிலான சி.ஐ.டி. போலீசார், அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்கள்.

நேரில் பார்வையிட்டு ஆய்வு

பின்னர் அத்திப்பள்ளி போலீசாரிடம், பட்டாசு விபத்து குறித்து இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த தகவல்களை கேட்டு அறிந்து கொண்டனர். அத்திப்பள்ளி போலீசாரும், வெடிவிபத்து தொடர்பாக பதிவான வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்கள், பலியானவர்கள், காயமடைந்தவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சி.ஐ..டி. போலீஸ் அதிகாரிகளிடம் வழங்கினர்.

குறிப்பாக பட்டாசு குடோன் நடத்தி வந்த ராமசாமி ரெட்டி குறித்த தகவல்களையும் சி.ஐ.டி. போலீசார் கேட்டு அறிந்து கொண்டனர். அத்துடன் பட்டாசு வெடி விபத்து நடந்த கடை, அருகில் இருந்த கடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி?, எத்தனை பேர் பணியாற்றினர்? என்பது உள்பட பல தகவல்களை அப்பகுதி மக்களிடம் சி.ஐ.டி. போலீசார் கேட்டறிந்து சேகரித்தனர். ். இதுதவிர தீயணைப்பு துறை, தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கையை பெற்றும், அடுத்தகட்ட விசாரணையை சி.ஐ.டி. போலீசார் நடத்த உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிர விசாரணை

அதே நேரத்தில் பட்டாசு விபத்திற்கு காரணம் குறித்தும் சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், விபத்திற்கான சரியான காரணத்தை கண்டறியும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் மற்ற 2 பேரையும் கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்