வயநாட்டில் வன விலங்குகள் ஊடுருவல் பிரச்சினை - 3 மாநில அரசுகளுக்கு கேரள ஐகோர்ட்டு வழங்கிய பரிந்துரை

3 மாநில அரசுகள் இணைந்து செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.

Update: 2024-02-22 12:50 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் காட்டு யானை தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வயநாடு வாழ் மக்கள் சமீபத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கடந்த 10-ந் தேதி யானை தாக்கியதில் அஜீஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், அந்த யானைக்கு கர்நாடக வனத்துறையால் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள மக்கள் பிரதிநிதிகள், யானை தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் வயநாட்டில் வன விலங்குகளின் தாக்குதல் தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் நீதிபதி கோபிநாத் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வயநாடு மாவட்டத்தில் வன விலங்குகள் ஊடுருவல் பிரச்சினையை சமாளிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில், கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணைந்து செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்துள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்