கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்

இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் எப்போது என்பது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-22 18:45 GMT

பெங்களூரு:

எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால் மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக பதவி பறிக்கப்பட்ட ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவி கேட்டு பா.ஜனதா தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் ரமேஷ் ஜார்கிகோளி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்க விவகாரம் குறித்து சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா மேலிடம் முடிவு

மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசுவதற்காக கூடிய விரைவில் டெல்லி செல்ல உள்ளேன். அங்கு பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச உள்ளேன். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது. ஈசுவரப்பா மற்றும் ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவி கேட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பா.ஜனதா மேலிடம் தான் முடிவு செய்யும். சித்ரதுர்கா மாவட்டத்திற்கு சில அரசியல் காரணங்களால் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரிசபையில் உரிய இடம் கிடைக்காமல் போனது. வரும் நாட்களில் சித்ரதுர்காவுக்கு சரியான பதவி கிடைக்கும். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது மாற்றியமைக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.

ரூ.100 கோடி ஒதுக்க தயார்

சித்ரதுர்கா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, துமகூரு-தாவணகெரே இடையே நேரடி ரெயில் சேவை இயக்க வேண்டும் என்பது தான். இந்த ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நிலம் கையகப்படுத்தும் பணிக்காக ரூ.100 கோடியை ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளது. பத்ரா மேல் அணை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து மத்திய அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்