ரஷிய அதிபர் தேர்தல்: கேரளாவில் சிறப்பு வாக்குச்சாவடி.. ஆர்வத்துடன் வாக்களித்த ரஷியர்கள்
வெளிநாடுகளில் வாழும் ரஷியர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.;
ரஷியாவில் அதிபர் தேர்தல் இன்று தொடங்கியது. 3 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். ரஷிய பகுதிகள் மற்றும் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். ரஷியாவின் 11 நேர மண்டலங்களிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ரஷியர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு சென்று வாக்களிக்கிறார்கள். மின்னஞ்சல் வாயிலாகவும் வாக்களிக்கிறார்கள்.
அவ்வகையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரஷிய துணை தூதரகத்தில் (ரஷிய இல்லம்) அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் ரஷிய குடிமக்கள் வாக்களித்தனர். கேரளாவில் நிரந்தரமாக தங்கியிருக்கும் ரஷியர்கள், சுற்றுலா வந்த ரஷியர்கள் என பலரும் வாக்களித்தனர்.
ரஷிய அதிபர் தேர்தலுக்காக, மூன்றாவது முறையாக கேரளாவில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஒத்துழைப்பு அளித்த ரஷிய குடிமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரஷியாவின் கவுரவ தூதரும், ரஷிய இல்லத்தின் இயக்குநருமான ரதீஷ் நாயர் தெரிவித்தார்.