தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை ஒற்றை ஆளாக தூக்கி காப்பாற்றிய பள்ளி மாணவி

ஆட்டோ கவிழ்ந்து அதன் அடியில் சிக்கிக்கொண்ட தாயை ஆட்டோவை தூக்கி நிறுத்தி, பள்ளி மாணவி காப்பாற்றியுள்ளார்.;

Update:2024-09-09 13:40 IST

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு கினிகோலியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதன் அடியில் சிக்கிக்கொண்ட தன் தாயை ஆட்டோவை தூக்கி நிறுத்தி, பள்ளி மாணவி காப்பாற்றியுள்ளார்.

ராஜரத்தினபுரத்தைச் சேர்ந்த சேதனா (35 வயது) என்பவர், டியூசன் சென்ற தனது மகளை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்றபோது, ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வேகமாக செல்ல முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஆட்டோவை முடிந்தவரை வளைத்து இடது புறம் திருப்பினார்.

இருப்பினும், தவிர்க்க முடியாமல் ஆட்டோ, அந்த இடத்தில் பைக் மீது அமர்ந்துகொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தவரின் மீது மோதியதுடன், அந்த பெண் மீதும் மோதி அவர் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தை கண்ட சேதனாவின் மகள் வேகமாக ஓடி வந்தார். துரிதமாக செயல்பட்ட அவர், தைரியத்துடன் தன் முழு பலத்தையும் வெளிப்படுத்தி அந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தினார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்களும், அந்த வழியாக சென்றவர்களும் அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்காக விரைந்து வந்தனர்.

ஆட்டோ டிரைவர் மற்றும் அருகில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமியின் தாய் மீட்கப்பட்டு சூரத்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விபத்தில் சிக்கிய தாயை பள்ளி மாணவி காப்பாற்றும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்