பீகாரில் வாலிபர் கொலை- காவல் நிலையத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
கொலையாளியை கைது செய்யாததால் ஆவேசம் அடைந்த அந்த கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பாட்னா,
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவர் சாலையோரம் அமர்ந்திருந்த போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் வாலிபருடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது.
இதில் மர்மநபர் வாலிபரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான பகவான்பூர் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
மேலும் கொலையாளியை கைது செய்யாததால் ஆவேசம் அடைந்த அந்த கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் சிலர் போலீஸ் நிலையம் முன்பு இருந்த போலீஸ் அதிகாரியின் வாகனங்களை உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்திய கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் கிராமத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.