போக்குவரத்து நெரிசல் பிரச்சிைனக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கட்டிடத்திற்கு அடிக்கல்
பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே சிங்கசந்திராவில் கர்நாடக கிராம வளர்ச்சித்துறை சார்பில் புதிதாக கட்டப்பட உள்ள வணிக கட்டிடத்திற்கு நேற்று காலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கல் நாட்டினார்.
பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நிதி ஒதுக்க அரசு தயார்
பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க அரசு தயாராக உள்ளது. பெங்களூரு நகர் முழுவதும் 7 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் அரசு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்திற்குள் நகர் முழுவதும் முதற்கட்டமாக 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
5 ஆயிரம் வாகனங்கள் பதிவு
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் நகரில் நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். டெல்லிகு்க அடுத்தபடியாக பெங்களூருவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். சராசரியாக 5 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியமானதாக கூறப்பட்டாலும், அதற்கு தீர்வு காண்பதும் அரசின் கடமையாகும். பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் பெங்களூருவுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது அரசின் பொறுப்பு.
நியூயார்க், டோக்கியோ, லண்டன் போன்ற நகரங்களை போன்று பெங்களூருவிலும் மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க நகரில் 12 இடங்களில் காரிடார் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்ததும் சாலை விரிவுப்படுத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெறும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.