காணிக்கையாக வழங்கப்படும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி

ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அபராதத்தை திரும்ப வழங்க ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.;

Update: 2023-04-23 16:54 GMT

பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளிப்பொருட்கள், சில்லரை நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை பிரதான உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய முடியாத வெளிநாட்டுப் பக்தர்கள் அந்தந்த நாட்டு கரன்சி நோட்டுகளை ஆன்லைன் மூலம் திருப்பதி தேவஸ்தான இ.உண்டியல் மூலமாக காணிக்கையைச் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் காணிக்கைகள் மத்திய அரசின் அன்னிய பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின்படி பெற வேண்டும்.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உள்பட அறக்கட்டளைகள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு முன் அந்த பணத்தை யார், எப்படி, எப்போது வழங்கினார்கள்? என்பது குறித்த பல்வேறு வகையான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதன்படி திருப்பதி தேவஸ்தானமும் உரிமம் பெற்று வெளிநாட்டு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு தகவல் அளித்து வந்தது.

அபராதம்

கொரோனா தொற்று பரவலால் கடந்த 3 ஆண்டுகளாக உரிமத்தை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதுப்பிக்காமல் இருந்தனர். இதனால் வெளிநாட்டு பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வங்கி கணக்கில் டெபாசிட் செய்த ரூ.30 கோடி வெளிநாட்டு கரன்சியை தேவஸ்தான வங்கி கணக்கில் வரவு வைக்காமல் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்திருந்தது.

அன்னிய பங்களிப்பு முறை சட்டத்தைப் புதுப்பிக்காததால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.6 கோடி அபராதம் விதித்தது. தேவஸ்தான அதிகாரிகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அபராதத்தொகை ரூ.3 கோடியாக குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு வியாபார நிறுவனம் இல்லை என்றும், இது ஒரு சமூக சேவைச் செய்யக்கூடிய ஆன்மிக தலம் என்றும் கூறி அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தினர். அதன்பேரில் அபராதத் தொகையை திரும்ப வழங்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டன.

அனுமதி

இதையடுத்து திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை வழங்கிய வெளிநாட்டு பக்தர்கள் தங்களின் விவரங்களை தெரிவிக்காவிட்டாலும் அதற்கு விலக்கு அளித்து, அந்த காணிக்கையை வங்கியில் டெபாசிட் செய்ய தேவஸ்தானத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக, மத்திய உள்துறை செயலாளர் தர்ஷிமுத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்