சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.;
பாட்னா,
பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13-ந்தேதி போட்டித்தேர்வு நடந்தது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்துமாறு பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித்தலைவருமான பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
டிச.,13ல் நடந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்பது எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை ரத்து செய்யக்கோரி, தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.