சூரத் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை
குஜராத்தில் சூரத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின்போது, சி.ஐ.எஸ்.எப். வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சூரத்,
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர் கிசன் சிங் (வயது 32). மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரரான இவர் இன்று பணியில் ஈடுபட்டு இருந்தபோது மதியம் 2.10 மணியளவில் பாதுகாப்பு பணிக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கியால் திடீரென வயிற்றில் சுட்டு கொண்டார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும், அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி காவல் ஆய்வாளர் என்.வி. பர்வாத் கூறும்போது, கிஷன் சிங் இந்த முடிவை எடுத்ததற்கான தெளிவான காரணம் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.
சி.ஐ.எஸ்.எப். சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2023-ம் ஆண்டில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.) தற்கொலை விகிதம் 1 லட்சத்திற்கு 16.98 என்ற அளவில் இருந்தது. இந்த விகிதம் நடப்பு ஆண்டில் 40 சதவீதம் குறைந்து உள்ளது என தெரிவித்து இருந்தது.
வீரர்களின் நலன்களுக்காக, மனநல திட்டங்கள் மற்றும் மனஅழுத்த மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை சி.ஐ.எஸ்.எப். மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாகவே இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.