விண்வெளியில் துளிர்விட்ட முதல் இலைகள்..! பிரமிக்க வைத்த இஸ்ரோவின் தாவர பரிசோதனை
விண்வெளி வீரர்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை விண்வெளியிலேயே உருவாக்கும் முயற்சிக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது.;
புதுடெல்லி:
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் டிசம்பர் 30-ம் தேதி இரண்டு சிறிய செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. இவை பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஆய்வுக் கருவியில் காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் எட்டு விதைகள் வைத்து அனுப்பப்பட்டிருந்தன. விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளை விட தொடங்கியது. விதைகள் 7 நாளில் முளைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4வது நாளிலேயே முளைக்கத் தொடங்கியது. 6-வது நாளில் இலை துளிர்விட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படத்தை இஸ்ரோ இன்று பகிர்ந்துள்ளது. அதில், "பி.எஸ்.எல்.வி.- சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றி அடைந்தது. காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளன" என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்த சாதனை மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனையானது விண்வெளியில் எதிர்கால பணிகளுக்கான நுண்ணறிவுகளையும் வழங்குவதாக இஸ்ரோ கூறி உள்ளது.
புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் தாவர வளர்ப்பு தொடர்பான இந்த ஆய்வு, விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, காற்று மற்றும் தண்ணீரை மீண்டும் உருவாக்கும் முயற்சிகளுக்கு மிகவும் முக்கியமானது. இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பதன்மூலம், விண்வெளியில் மனிதர்கள் நீண்டகாலம் தங்குவதற்கான அடுத்தகட்ட ஆய்வுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.