பா.ஜனதாவில் கருத்து வேறுபாடு இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பா.ஜனதாவில் கருத்து வேறுபாடு இல்லை என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் ஒருவரை முதல்-மந்திரி ஆக்குவதாக குமாரசாமி கூறியுள்ளார். இது அவரது கட்சியின் முடிவு. இதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன். சித்ரதுர்கா முருகா மடத்தின் விவகாரம் குறித்து கலெக்டர் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கை சட்டத்துறையின் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும்.
முருகா மடம் குறித்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனால் இதுபற்றி நான் அதிகம் பேச மாட்டேன். பா.ஜனதாவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் இந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் உள்ளார். அவர் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவர் இங்கு வரவில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.